உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டம் பர்தானா பகுதியில் தெருவில் சுதந்திரமாக சுற்றும் காளைகள் மற்றும் பசுக்கள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. சமீபத்தில் பிரிஜ்ராஜ் நகரில் விமலா தேவி என்ற பெண் தனது நாயுடன் நடைபயணம் சென்றபோது, ஒரு காளை அவரை பின்னால் இருந்து தாக்கியது.
அந்த பெண் தரையில் வீழ்ந்ததும், காளை கொம்பால் பலமுறை தாக்கியது. அந்தப் பெண் அலறிய சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குச்சிகளை பயன்படுத்தி காளையை விரட்டினர்.
பலத்த காயமடைந்த விமலா தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது.
इटावा में आवारा सांड ने महिला के ऊपर किया हमला, सीसीटीवी में खौफनाक मंजर हुआ क़ैद
भरथना इलाके में एक महिला के ऊपर आवारा सांड ने जानलेवा हमला कर दिया, जिसके बाद महिला जमीन पर गिर गई और सांड महिला के पेट में सींग मारता रहा। घटना पास में लगे सीसीटीवी में कैद हो गई। #Etawah |… pic.twitter.com/pyBrlQbVd8
— प्रतीक खरे/Pratik khare 😷 (@pratik_khare_) July 23, 2025
இதே பகுதியில் வசிக்கும் பங்கஜ் சிங் என்பவர், பல மாதங்களாக அதே காளையின் தாக்குதலால் அவதிப்பட்டு வருகிறார். “அந்தக் காளை எப்போதும் அமைதியாக பின்னால் வந்து தாக்கும். வீட்டை விட்டு வெளியே வரவே பயமாக இருக்கிறது” என அவர் கூறியுள்ளார்.
இதற்காக அவர் பர்தானா துணை மாவட்ட நீதிபதியிடம் பாதுகாப்பு கோரி எழுத்துப்பூர்வ மனு அளித்துள்ளார். இதுவரை எந்த அதிகாரபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
பர்தானா பகுதியில் கடந்த ஒரு வருடத்திலேயே தெருவில் திரிந்த விலங்குகளால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் ராகேஷ் கதேரியா, நவம்பரில் அதர் சிங் ஷக்யா, ஜூன் 2025 இல் பல்வீர் சிங் பிரஜாபதி ஆகியோர் தெரு விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
மக்கள் பாதுகாப்பு கோரி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், இது வரை தீர்வு காணப்படாத நிலையில், பொதுமக்களிடையே கடும் நம்பிக்கையிழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் “உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தெருக்களில் இறங்கி போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும்” என எச்சரிக்கின்றனர்.
