சஹாரன்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த இரண்டு அதிர்ச்சிச் சம்பவங்கள் இதோ, கடும் வலியால் துடித்த ஒரு பெண்ணை சிகிச்சைக்காக உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் ஸ்டிரெச்சர் அல்லது சக்கர நாற்காலி (Wheelchair) வழங்க முன்வரவில்லை. இதனால் வேறு வழியின்றி, அந்தப் பெண்ணை உறவினர்கள் கைகளிலேயே தூக்கிக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஓடினர்.

மற்றொரு சம்பவத்தில், புறநோயாளிகள் சீட்டு வாங்கும் வரிசையில் நின்றிருந்த ஒரு பெண், தனக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறியும் ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை. “உடல்நிலை சரியில்லை என்றால் அவசரப் பிரிவுக்குப் போ” என அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெண் மருத்துவமனை வளாகத்திலேயே மயங்கி விழுந்து தரை மீது கிடந்தார். அங்கிருந்த காவலர்களும் ஊழியர்களும் வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் உதவவில்லை. இறுதியில் அங்கிருந்த பொதுமக்களே அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்று அனுமதித்தனர்.