மத்தியப் பிரதேச மாநிலம் சீதி மாவட்டத்தில், பாஜக கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் பெண்ணை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சீதி மாவட்டத்தின் பஹ்ரி கிராமத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பாஜக பிரமுகரான சந்தோஷ் என்பவர், ஒரு பெண்ணை நடுரோட்டில் வைத்துப் பலமாகத் தாக்கியுள்ளார். அந்த வீடியோவில், பெண்ணின் கூந்தலைப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் அந்த நபர், கீழே தள்ளி கால்களால் எட்டி உதைப்பதும், கையில் வைத்திருக்கும் தடியால் சரமாரியாகத் தாக்குவதும் பதிவாகியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியபோது, அங்கே ஏராளமான பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். இருப்பினும், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அங்கிருந்தவர்கள் மௌன சாட்சிகளாக நின்றிருந்த நிலையில், யாரோ ஒருவர் இந்தத் தாக்குதலைத் தனது செல்போனில் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்தப் பெண் போராடிய போதிலும், அந்த நபர் விடாமல் அவரைத் தொடர்ந்து தாக்கியது காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கிய நபர் பாஜகவின் உள்ளூர் பிரமுகர் என்பது தெரியவந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. “அதிகார மமதையில் மனிதாபிமானத்தை மறந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணைத் தாக்கிய பாஜக பிரமுகர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.