உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நள்ளிரவு இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, அதே வீட்டில் வாடகைக்கு இருந்த இருவர் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், தங்கள் குற்றத்தை மறைக்க அந்தப் பிஞ்சு குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசி எறிந்துள்ளனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுமி மாயமானது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த ராஜூ மற்றும் வீரு காஷ்யப் ஆகிய இருவர் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

தலைமறைவான அவர்களைப் பிடிக்கச் சென்றபோது, குற்றவாளிகள் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுத் தப்ப முயன்றனர். உடனே போலீசார் நடத்திய அதிரடி என்கவுண்டரில், குற்றவாளிகள் இருவரின் கால்களிலும் குண்டு பாய்ந்தது. காயமடைந்த இருவரையும் கைது செய்த போலீசார், தற்போது அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துக் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.