ரஞ்சி கிரிக்கெட் உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் சர்பராஸ் கான், அதிக உடல் எடையால் விமர்சனங்களை சந்தித்தவர். “இப்படி உடல் எடையுடன் எப்படி கிரிக்கெட் விளையாட முடியும்?” என கேள்வி எழுந்தாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல் திறமையாக ஆடி வந்தார்.
இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாததற்கு உடல் எடையும் ஒரு காரணம் என கூறப்பட்ட நிலையில், தனது அசாத்திய திறமையால் கடந்த ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்றார். 6 போட்டிகளில் 371 ரன்கள் குவித்த அவர், ஒரு சதம், மூன்று அரைசதங்கள் உட்பட 150 ரன்கள் அதிகபட்ச ஸ்கோராக அடித்து அசத்தினார்.
நியூசிலாந்து தொடர் முடிந்து, ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சர்பராஸுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து, தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையை குறைத்து, மாறிய தோற்றத்தில் உள்ளார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால், இந்திய அணியில் மீண்டும் உறுதியாக இடம் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
