கேரள மாநிலம் எடப்பள்ளி–மன்னுத்தி இடையிலான தேசிய நெடுஞ்சாலை, தற்போது பயணிகளுக்கு பெரும் துன்பமாக உள்ளது. பல பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வார இறுதி நாட்களில், ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை, பல மணி நேரம் கழித்து கடக்க வேண்டிய பரிதாப நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், பயணிகள் தாமதத்துடன் நெடுஞ்சாலையை கடக்க வேண்டியதுடன், கூடுதலாக சுங்கக் கட்டணமும் செலுத்த வேண்டி உள்ளது.

இதனால், சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக்கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், தற்காலிகமாக சுங்கக் கட்டண வசூலுக்கு தடையுத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு, இன்று நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்ஜாரியா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை பரிசீலித்த நீதிபதிகள், “ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரம், 11 மணி நேரமாக மாறி உள்ளது” எனக் கவலையுடன் தெரிவித்தனர்.

“பயணிகள் 12 மணி நேரம் செலவழித்து, அதற்கு மேலாக ₹150 சுங்கக் கட்டணமும் செலுத்துகின்றனர். இது நியாயமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், “அனைத்து காரணிகளையும் பரிசீலனை செய்து தீர்மானிக்கப்படும். உத்தரவை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்” என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் முடிவை சாலையில் பயணிக்கிற ஆயிரக்கணக்கானோர் எதிர்நோக்கி காத்துள்ளனர். மோசமான சாலைக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்து புதிய வழிகாட்டி வருமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.