தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் “ஆட்சியில் பங்கு” என்ற விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் போன்றோர் அதிகாரப் பகிர்வு வேண்டும் என பகிரங்கமாக முழக்கமிட்டு வரும் நிலையில், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், “கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் மேலிடம் தான் எடுக்கும்” என ஒற்றை வரியில் சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரிடமிருந்து வெவ்வேறு கருத்துக்கள் வந்து கொண்டிருப்பதை ஒப்புக் கொண்ட அவர், கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனக் கூறி திமுக-வுடனான விரிசலையும், விஜய்யின் தவெக-வுடனான கூட்டணி வாய்ப்பையும் வெளிப்படையாக மறுக்காமல் மழுப்பியுள்ளார்.
கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு காங்கிரஸின் எதிர்காலத்திற்கு (2029 தேர்தல்) உதவும் என வேணுகோபால் கருதுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
திமுக ஒருபுறம் “ஆட்சியில் பங்கு இல்லை” என கறாராகச் சொல்லி வரும் நிலையில், காங்கிரஸின் இந்த ‘மதில் மேல் பூனை’ ஆட்டம் தமிழக அரசியலில் புது ரூட் போடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
