தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் இடையே “ஆட்சியில் பங்கு” என்ற விவகாரம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், இன்று சென்னையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று தமிழகம் வந்துள்ள நிலையில், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் சென்னை முகப்பேர் பகுதியில் “காங்கிரஸ் உரிமை மீட்பு குழு” என்ற பெயரில் அதிரடி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அதில் ராகுல் காந்தியின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததோடு, “ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடனே கூட்டணி வேண்டும்; சுயமரியாதையை இழந்து திமுக-வுடன் கூட்டணி வேண்டாம்” என்ற வாசகங்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

வேணுகோபால் வரும் நேரத்திலேயே, “அகில இந்திய தலைமையே புரிந்து கொள்!” எனச் சொந்தக் கட்சியினரே போர்க்கொடி தூக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், ஒட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த போஸ்டர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டன. ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், “திமுக வேண்டாம்” எனச் சென்னையில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் கிழிப்புச் சம்பவம், கூட்டணிக்குள் இருக்கும் விரிசலை ஊர்ஜிதப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.