ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகிய இரண்டு தொடர்களிலும் விளையாடிய அனுபவம் கொண்ட தென்னாப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் ரிலீ ரோசோ, ஐபிஎல் தொடரை ஒரு “சினிமா” என விமர்சித்துள்ளார்.

தற்போது பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், ஐபிஎல் தொடர் மிக நீண்ட காலம் நடைபெறுவதாகவும், அதில் பாலிவுட் நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அது ஒரு கிரிக்கெட் தொடரை விட சினிமா தயாரிப்பு போலவே தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல் தொடர் குறுகிய காலத்தில் விறுவிறுப்பாக நடப்பதால், அங்கு தான் போட்டித்தன்மை மிக அதிகமாக இருப்பதாக அவர் வாதிட்டுள்ளார். ரோசோவின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஐபிஎல் ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலகின் மிகச்சிறந்த வீரர்கள் விளையாடும், உலகத்தரம் வாய்ந்த ஒரு தொடரை பிஎஸ்எல்-உடன் ஒப்பிடுவது தவறு என அவர்கள் சாடி வருகின்றனர்.

அதே வேளையில், பாகிஸ்தான் ரசிகர்கள் ரோசோவின் கருத்தை வரவேற்று வருகின்றனர். ஏற்கனவே பிஎஸ்எல் மற்றும் ஐபிஎல் இடையே எது சிறந்தது என்ற விவாதம் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில், ரோசோவின் இந்த வெளிப்படையான பேச்சு கிரிக்கெட் உலகில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.