ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைத் திணறடித்து வருகிறார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்திய அவர், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற ஜாம்பவான்களின் ஓவர்களிலும் பவுண்டரிகளைப் பறக்கவிட்டுள்ளார்.
இந்தத் தொடரில் ஏற்கனவே இரண்டு முறை வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து ‘ஆரஞ்சு கேப்’ வென்றுள்ள வைபவ், தற்போது கிரிக்கெட் உலகின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். ஆர்சிபிக்கு எதிரான அதிரடி ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருது வென்ற அவர், தனது வெற்றிக்கான ரகசியம் குறித்து மனம் திறந்துள்ளார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய வைபவ், “எதிரே யார் பந்துவீசுகிறார்கள் என்பதை விட, பந்து எப்படி வருகிறது என்பதில் மட்டுமே எனது கவனம் இருக்கும். பயிற்சியில் எதைச் செய்தேனோ அதை அப்படியே களத்தில் செய்கிறேன்” எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் அவுட் ஆகும்போது வருத்தப்படுவதற்கு காரணம், இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் அணிக்கு உதவியாக இருந்திருக்கும் என்பதுதான்” எனக் கூறி தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் தனக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும், இது நீண்ட பயணத்தின் ஆரம்பம் மட்டுமே என்றும் அந்த 15 வயது சிறுவன் கூறியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
