பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒரு காலத்தில் பெண்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு பெண் அடிமை என்பது தலை தூக்கி இருந்தது. பெண் குழந்தைகள் என்றாலே குடும்பத்திற்கு சுமையாக பார்க்கப்பட்டனர். அதன் பிறகு காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் பெண்ணை அடிமையாக பார்த்த சமூகம் தற்போது மாறி வருகிறது.

இருந்தாலும் பெண் குழந்தைகள் மீதான எண்ணம் என்பது முழுமையாக மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இன்னும் குழந்தை திருமணம் மற்றும் பெண் சிசுக்கொலை போன்ற கொடுமைகள் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. பெண் குழந்தைகள் மீது இன்னும் நாம் அக்கறை காட்ட வேண்டும்.இதற்காகத்தான் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் உலகம் முழுவதும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சத்தம் மற்றும் மருத்துவ உரிமைகள் மற்றும் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. எனவே பெண்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்து முழு திறனையும் அடைவதற்கான பணிகளில் அதிக கவனம் செலுத்துவது அதற்கான ஆதாரங்களை வழங்குவதும் தற்போது அவசர தேவையாக உள்ளது.