ஹாங்காங் சிக்ஸஸ் 2025 (Hong Kong Sixes 2025) கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி ஒரு பரபரப்பான த்ரில்லராக அமைந்தது. முதலில் பேட் செய்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி, ராபின் உத்தப்பா (11 பந்துகளில் 28 ரன்கள்), பரத் சிப்ளி (13 பந்துகளில் 24 ரன்கள்), மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் (6 பந்துகளில் 17 ரன்கள்) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், 6 ஓவர்களில் 86/4 ரன்கள் குவித்தது.

87 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 3 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில், திடீரெனக் கனமழை குறுக்கிட்டது. மழையின் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டபோது, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி (DLS) கணக்கிடப்பட்டது. இதில், பாகிஸ்தானை விட இந்திய அணி 2 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், த்ரில்லான வெற்றியை இந்திய அணி வசப்படுத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா மதிப்புமிக்க இரண்டு புள்ளிகளைப் பெற்றது.

மழை காரணமாக வெற்றியை உறுதி செய்த இந்திய வீரர்கள், வழக்கம் போல போட்டி முடிந்த பின் எதிரணி வீரர்களுடன் கைக்குலுக்க (Handshake) மறுத்து, ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்திய அணி இதற்கு முன்னரும் பல சர்வதேச தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

அதே மரபை இத்தொடரிலும் பின்பற்றி இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்தது, ஆட்டத்தின் முடிவுக்குப் பின்னரும் ஒரு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆறு ஓவர்கள் கொண்ட இந்த மினி ஃபார்மேட் போட்டியில் ராபின் உத்தப்பா தனது அதிரடி ஆட்டத்திற்காக ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றி, இந்திய அணிக்கு ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் ஒரு வலுவான தொடக்கமாக அமைந்துள்ளது.