இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியது இந்தியன் திரைப்படம். இந்தப் படத்தின் முதல் பாகம் 1996- ஆம் ஆண்டு திரையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பின்னர் கடந்த 2017- ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டு இந்தியன் 2 என்ற பெயரில் படபிடிப்பு நடைபெற்றது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ப்ரியா பவானிசங்கர் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் லைக்காவின் தயாரிப்பில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பல சம்பவத்தினால் இதன் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது. இதனையடுத்து வந்த கொரோனா ஊரடங்கு போன்ற பல காரணங்களினால் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டு இருந்த நிலையில், லைக்கா நிறுவனத்துடன் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இணைந்து இந்த திரைப்படத்தை உருவாக்க தொடங்கியது. இதுவரையில் கமலும், விவேக்கும் இணைந்து எந்த படத்திலும் நடித்தது இல்லை.

ஆனால் இப்படத்தில் நடிகர் விவேக், கமலுடன் சில காட்சிகளில் இணைந்து நடித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் விவேக் மாரடைப்பினால் உயிரிழந்தார். ஆனால் விவேக் நடித்த சில காட்சிகளை நீக்காமல் படத்தில் அப்படியே வைக்குமாறு இயக்குனர் சங்கரிடம் கமல் தெரிவித்துள்ளார். இதற்கு சங்கரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த செய்தி விவேக் ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடையும். எனவே இந்த படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.