ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் 15வது நாளை எட்டியுள்ள நிலையில், இலங்கைக் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த அந்தப் போர்க்கப்பலில் 183 வீரர்கள் இருந்த நிலையில், தாக்குதலால் கப்பல் கடலில் மூழ்கியது.
இதில் 87 வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் மாயமாகினர். இலங்கையிடம் மீட்கப்பட்ட வீரர்களைத் தடுத்து வைக்குமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்த போதிலும், அதற்கு அடிபணியாத இலங்கை அரசு வீரர்களையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் ஈரான் நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தது. இதற்குப் பாரத நாடு முழு ஒத்துழைப்பு வழங்கி ஈரான் வீரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் நிலவி வரும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க ஈரானின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது. ஹாமூஸ் நீரணை வழியாக வரும் இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் காயமடைந்த ஈரானிய வீரர்களைத் தாயகம் அனுப்ப கொச்சி விமான நிலையம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி கொச்சியிலிருந்து துருக்கி விமானம் மூலம் அர்மேனியா கொண்டு செல்லப்படும் வீரர்கள், அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரான் சென்றடைய உள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் ஈரானுக்கு இந்தியா கரம் கொடுத்துள்ளது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
