மும்பை நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் வருமானம் குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேசியுள்ள காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் வாழ்க்கைச் செலவு மிக அதிகம் என்று ஒரு பயணி கூறியதற்குப் பதிலளித்த அந்த ஆட்டோ ஓட்டுநர், இங்கு பணம் மழையாகப் பொழிகிறது என்றும் அதனைப் பிடிப்பதில்தான் திறமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

செலவுகள் போகத் தினமும் சராசரியாக 2500 ரூபாய் வரை சம்பாதிப்பதாக அவர் கூறியதைக் கேட்டு அந்தப் பயணி அதிர்ச்சி அடைந்தார். மாதம் 75000 ரூபாய் வரை வருமானம் ஈட்டும் இந்தத் தொழில், பொறியியல் முடித்துவிட்டு அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் ஆரம்ப கால ஊதியத்தை விட அதிகம் என்று அந்தப் பயணி வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by @uvichar_

இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருபுறம் ஒரு மென்பொறியாளர் ஈட்டும் வருமானத்தை விட ஆட்டோ ஓட்டுநர் அதிகம் சம்பாதிப்பது வெற்றியின் புதிய இலக்கணமாகப் பார்க்கப்பட்டாலும், மற்றொரு தரப்பினர் இதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் வெயில், போக்குவரத்து நெரிசல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளுக்கு இடையே நிலையற்ற வேலை நேரங்களில் பணியாற்ற வேண்டியுள்ளது என்றும், அலுவலகப் பணிகளில் கிடைக்கும் நிம்மதியும் பாதுகாப்பும் இதில் இருக்காது என்றும் சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் உழைப்பவர்களுக்கு மும்பை போன்ற மாநகரங்கள் என்றும் கை கொடுக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.