மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி நகரில், சிறுவன் ஒருவன் மீது அத்துமீறிப் பாலியல் கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அந்த மாவட்டத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரத்னகிரி நகரின் ராஜீவாடா பகுதியைச் சேர்ந்த ஜூபைர் சலீம் ஷேக் (22) மற்றும் முஸ்தகின் கட்கரி (24) ஆகிய இருவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை மிரட்டி, அநாகரீகமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கொடூரமான செயலை அங்கிருந்தபடியே வீடியோவாகப் பதிவு செய்த அந்த நபர்கள், அச்சிறுவனை மிரட்டி வாயடைக்கச் செய்துள்ளனர். இதனால் பயந்துபோன அந்தச் சிறுவன், நடந்த விபரீதத்தை யாரிடமும் சொல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தான்.
இந்தக் கொடூரக் காட்சிகளைப் பதிவு செய்ததோடு நில்லாமல், சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை அந்த நபர்கள் பரப்பியுள்ளனர். கடந்த மார்ச் 12-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் இருப்பது தனது மகன் என்பதை உறுதி செய்த அவர், பதறியடித்துக்கொண்டு` காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில்,வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உடனடியாகச் செயல்பட்டு ஜூபைர் சலீம் ஷேக் மற்றும் முஸ்தகின் கட்கரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தை மிக முக்கிய வழக்காகக் கருதி, காவல் ஆய்வாளர் விவேக் பாட்டீல் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேறு எங்கெல்லாம் பகிரப்பட்டுள்ளது, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டாலும், இத்தகைய கொடூரமான செயல்கள் குழந்தைகள் மீது நடத்தப்படுவது அந்தப் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அல்லது மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
