இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 18) இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் செல்லும் முனைப்புடன் இரு அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கக் காத்திருக்கிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 2,966 ரன்கள் எடுத்துள்ள அவர், நாளை நடைபெறும் போட்டியில் இன்னும் 34 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.
இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக (69 இன்னிங்ஸ்கள்) 3,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன்னதாக ஷிகர் தவான் 72 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 75 இன்னிங்ஸ்களிலும் இந்தச் சாதனையைச் செய்ததே சாதனையாக இருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் இந்த மைல்கல்லை எட்டும் பட்சத்தில், சர்வதேச அளவில் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸின் சாதனையையும் சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
