மத்தியப் பிரதேசத்தின் மொரினா (Morena) பகுதியில், மகன் பிறக்கச் சிறப்புச் சடங்கு செய்வதாகக் கூறி 70 வயது முதியவர் ஒருவரால் 24 வயது இளம்பெண் வன்புணர்வு செய்யப்பட்டக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
மூன்று வருடங்களாகக் குழந்தை இல்லாததால், மகன் பிறக்க வேண்டி அந்தப் பெண்ணும் அவரது மாமியாரும் லிதோரா (Lidhoura) கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரகாஷ் பச்சோரி என்ற தாந்திரீகரைச் சந்தித்தனர்.
அந்தப் பெண்ணின் ‘கருப்பை அடைபட்டுள்ளது’ என்று நம்ப வைத்து, அந்தத் தாந்திரீகர் அவர்களைச் சடங்குக்காக மீண்டும் வரவழைத்துள்ளார்.
சடங்கிற்காக, தாந்திரீகர் மாமியாரை ஒரு எலுமிச்சைப் பழத்தை ஒரு கிலோமீட்டர் தூரம் தூக்கி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் இருக்கச் சொன்னார்.
மாமியார் அங்கிருந்துச் சென்ற உடனேயே, தாந்திரீகர் அந்தப் பெண்ணை வன்புணர்வுக்கு உள்ளாக்க முயன்றார். அவர் எதிர்த்தபோது, அருகிலிருந்த அரிவாளைக் எடுத்து அவரதுக் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்ததால், பயந்துபோன அந்தப் பெண் தன்னால் போராட முடியவில்லை.
வன்புணர்வுக்குப் பிறகுத் தாந்திரீகர் அந்தப் பெண்ணை விடுவித்தார். உடனடியாகத் தனது மாமியாரிடம் நடந்ததைக் கூறிய இருவரும் போலீஸில் புகார் அளித்தனர். தற்போது அந்தத் தாந்திரீகர் தலைமறைவாக உள்ள நிலையில், போலீஸார் அவரைக் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
