ராஜஸ்தான் மாநிலம், அல்வார் (Alwar) அருகே உள்ள சிலிசெர் ஏரிக்கு (Siliserh Lake) அருகில், ஒரு குழுவாக வந்த இளம் ரீல்ஸ் (Reels) தயாரிப்பாளர்கள், சமூக ஊடகப் புகழுக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், குளத்தின் அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதலைக்கு அருகில் நின்று அவர்கள் செல்ஃபி எடுப்பதும், அவர்களில் ஒருவர் முதலையின் வாலைப் பிடிக்க முயல்வதும் பதிவாகியுள்ளது.

அந்த இளைஞரின் செயலால் மிரண்டு போன முதலை, உடனடியாக நீருக்குள் பாய்ந்துள்ளது. இது எளிதில் ஒரு பெரும் தாக்குதலாக மாறியிருக்க வாய்ப்புள்ளது.

இத்தகைய வனவிலங்குகளுடன் ஆபத்தான முறையில் தொடர்புகொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக வனத்துறை அதிகாரிகளும், இணையவாசிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

சிலிசெர் ஏரியில் குளிர்காலங்களில் 300-க்கும் மேற்பட்ட மகர் முதலைகள் (Mugger crocodiles) ஓய்வெடுப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற பொறுப்பற்றச் செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுப் பலரும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.