வங்கிப் பரிவர்த்தனைகள், முதலீடுகள், கடன் பெறுதல் போன்ற அனைத்து நிதிச் செயல்பாடுகளுக்கும் இன்றியமையாத ஆவணமாகக் கருதப்படும் பான் கார்டை (PAN Card) ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கானக் கடைசித் தேதியை அரசு டிசம்பர் 31, 2025 வரை நிர்ணயித்துள்ளது. இந்தத் தேதிக்குள் இணைப்பு முடியாவிட்டால், ஜனவரி 1, 2026 முதல் உங்கள் பான் கார்டு செயலற்றதாகக் (Inoperative) கருதப்படும்.

அக்டோபர் 1, 2024-க்கு முன்பு ஆதார் பதிவு ஐடியின் அடிப்படையில் பான் வழங்கப்பட்டவர்கள், டிசம்பர் 31, 2025-க்குள் கட்டாயமாக ஆதார் எண்ணை வழங்க வேண்டும். எனினும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் (சூப்பர் சீனியர் சிட்டிசன்கள்), என்.ஆர்.ஐக்கள் (NRI), ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் மேகாலயாவைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர் ஆகிய சில பிரிவினருக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பான்-ஆதாரை இணைக்க, வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் சென்று, விரைவு இணைப்புகள் (Quick Links) பிரிவில் ‘இணைப்பு ஆதார்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட்டு, யூபிஐ மூலம் ₹1,000 கட்டணத்தைச் செலுத்திச் சமர்ப்பிக்கலாம்.