கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன், யமுனா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக் என்ற 3 மகன்கள் உள்ளன. யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து தற்காலிக நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு தனது மகன் ஸ்ரீராக்கை அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைக்கு சேர்த்து விட வேண்டும் என்று பல காலமாக கனவு இருந்தது. இதற்காக தனது மகனை டிரைவராக பயிற்சி பெற வைத்தார். அதன் பின்பு வனத்துறையில் தற்காலிக டிரைவராக அவர் பணியாற்றினார்.

அதிலிருந்து கொண்டே அவர் அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் வேலைக்காக முயற்சி செய்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர் வேலை கிடைத்தது. இவருக்கு தனது முதல் நாள் வேலையை தன்னுடைய தாயுடன் சேர்ந்து பார்க்க விரும்பினார். அந்த விருப்பத்தை போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்தார். அதற்கு அவர் சம்மதித்தார். இதனை அடுத்து அவருடைய விருப்பப்படி, அவரது தாயும் அதே பஸ்ஸில் நடத்துனராக இருந்தார்.

இதனை பார்க்க பலரும் ஆர்வமாக இருந்தனர். இவர்கள் இருவரும் ஒரே பேருந்தில் வேலை பார்க்கும் நிகழ்வைக் காண யமுனாவின் மற்ற மகன்கள் ஸ்ரீராக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் பேருந்து நிலையத்தில் வந்திருந்தனர். மேலும் வேலை இடைவேளையின்போது தாய், மகன் இருவரும் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து சாப்பிட்டனர். தன்னுடைய மகனுடன் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று யமுனா தெரிவித்தார்.