மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையில், இந்தியாவின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 63 மாவட்டங்களில், அங்கன்வாடி மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாத ஊட்டச்சத்து கண்காணிப்பு தரவுகள் அடிப்படையில், வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 34 மாவட்டங்களில் இந்த நிலைமை இருக்கிறது. இதைப் தொடர்ந்து மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் வருகின்றன.

மராட்டிய மாநிலத்தின் நந்தூபார் மாவட்டத்தில் 68.12% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர். ஜார்க்கண்ட்டின் மேற்கு சிங்பூம் (66.27%), உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் (59.48%), மத்தியபிரதேசத்தின் சிவபுரி (58.20%), அசாமின் போங்கைகான் (54.76%) ஆகியவை மத்திய அரசின் பட்டியலில் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.

மொத்தமாக 0 முதல் 6 வயது வரையிலான 8.19 கோடி குழந்தைகள் அங்கன்வாடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 35.91% குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களாகவும், 16.5% குழந்தைகள் குறைவான எடையுடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் நாட்டில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் தீவிரத்தையும், அதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.