தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் ராமகிருஷ்ணாபூர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த லாவண்யா என்ற 25 வயது இளம்பெணுக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது லாவண்யாவின் பெற்றோர் 50 லட்சம் பணம், 35 பவுன் தங்கநகைகளை வரதட்சணையாக  வழங்கியதாக கூறப்படுகிறது. சுரேஷ் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வந்தார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், லாவண்யா கணவரை விட்டு பிரிந்து தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 16ம் தேதி, லாவண்யா தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது திடீரென விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த லாவண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி லாவண்யாவும் கடந்த ஜூலை 24ம் தேதி மரணமடைந்தார்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, லாவண்யாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதனை அவரது கணவர் சுரேஷ் வீட்டுக்கு கொண்டு சென்றபோது, லாவண்யாவின் தாயார் வரதட்சணையாக திருமணத்தின்போது கொடுத்த 50 லட்சம் பணம் மற்றும் 35 பவுன் நகைகளை திருப்பி கொடுக்குமாறு வலியுறுத்தி, மகளின் உடலுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். “மகளுக்கு கொடுத்ததை திருப்பி கொடுங்கள், இல்லையெனில் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்,” என உறவினர்களுடன் இணைந்து வலியுறுத்திய அவர், 2 நாட்கள் உடலுடன் போராடினார்.

இந்த சூழ்நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக, சமரசம் ஏற்பட்டதையடுத்து, லாவண்யாவின் தாயார் தனது மகளின் உடலை எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். இந்த சம்பவம் தெலுங்கானா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை போன்ற பழமையான நடைமுறைகள் இன்று வரை பெண்களின் வாழ்க்கையை ஆழமாக பாதிக்கின்றன என்பதற்கான வெதுவெதுப்பான எடுத்துக்காட்டு இது.