குவாலியர்-கைலாரஸ் எம்இஎம்யூ (MEMU) ரயிலின் இயந்திரத்தில் மது அருந்திய ஆண் ஒருவர் புகுந்து, லோகோ பைலட்டைப் தள்ளி வைத்து, “நான் தான் ரயில் ஓட்டுவேன்” என்று பிடிவாதமாகக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை ரயில் புறப்படும் நேரத்திற்கு முன்பாகவே நடந்த இந்த சம்பவம், வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரயில்வே பணியாளர்களின் தகவலின்படி, அந்த ரயில் பிளாட்பார்ம் எண் 3-ல் ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்து நின்றது. அந்த நேரத்தில், மது போதையில் இருந்த அந்த நபர், பயணத்திற்கு பயன்படுத்தப்படாத ஜான்சி முனை இயந்திரத்தில் ஏறி, டிரைவர் இருக்கையில் அமர்ந்தார்.

அங்கு இருந்த உதவி லோகோ பைலட் அவரை இறங்கச் சொல்லியபோதும் அவர் மறுத்து வாக்குவாதம் செய்தார். பின்னர் 3-4 லோகோ பைலட்டுகள் சேர்ந்து கடும் முயற்சிக்குப் பிறகே அவரை வெளியே இழுத்து வந்தனர்.

பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், ஏனெனில் அந்த ரயில் ஆக்ரா முனை இயந்திரத்திலிருந்து மொரேனா வழியாக கைலாரசுக்கு இயக்கப்படவிருந்தது. இயந்திரத்தில் ஏறும் முன், அந்த நபர் பிளாட்பார்ம் எண் 1-ல் பயணிகளுடன் வாக்குவாதம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அவரை வெளியேற்றிய பின்னரும், பிளாட்பார்மில் கத்திக்கொண்டும் சண்டை செய்துகொண்டும் இருந்ததால் பெரிய திரள் அங்கு கூடிவிட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு (RPF) தகவல் அளிக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.