அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் சாகேத் சீனிவாசய்யா, மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் முதுகலை படித்து வந்த இவர், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திடீரென காணாமல் போனார்.
மேலும் பல்கலைக்கழக வளாகம் அருகே உள்ள அன்சா ஏரி பகுதியில் அவரது லேப்டாப் மற்றும் பாஸ்போர்ட் அடங்கிய பை கண்டெடுக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக அமெரிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தற்போது அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி-யில் இளங்கலைப் படிப்பை முடித்த சாகேத், ஒரு திறமையான மாணவராக அறியப்பட்டார். அவரது மறைவு குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாகேத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ உதவிகளையும் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் சாகேத்தின் மரணத்திற்கான காரணம் குறித்து அமெரிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த துயர சம்பவம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
