அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என்று பரவி வரும் செய்திகளுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி கொள்முதல் முடிவுகள் என்பது நாட்டின் தன்னாட்சி அதிகாரம் சார்ந்தது என்றும், அது எக்காலத்திலும் மற்ற நாடுகளின் விருப்பத்திற்கேற்ப அமையாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபம், சந்தை நிலவரம், இடர் காரணிகள் மற்றும் விலையை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமையைப் பாதிக்காது என்று உறுதிபடக் கூறினார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியா ரஷிய எண்ணெயைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்தப் பதில் சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வது அரசின் கடமை என்றும், அதற்காக எந்தத் தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த விவாதம் பல காலமாகத் தொடர்ந்தாலும், இந்தியாவின் தேசிய நலனே முதன்மையானது என்பதைத் தனது பேச்சின் மூலம் ஜெய்சங்கர் மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளார்.