ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் கிரிக்கெட் வீரர் ஃபர்கந்தா கான், மும்பையைச் சேர்ந்த 28 வயது இளம் தொழிலதிபரை மிரட்டி 63 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இவரது சகோதரர் பாசில் கான் மற்றும் உத்தீன் இம்தியாஸ் வானி என்ற மற்றொரு கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024-ஆம் ஆண்டு தொழிலதிபருடன் பழக்கமான ஃபர்கந்தா கான், அவருடன் செல்போனில் நெருக்கமாகச் சாட் செய்துள்ளார். பின்னர், அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களைப் பகிரங்கமாக வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார்.

கடந்த 2024 ஏப்ரல் முதல் 2026 ஜனவரி வரை சுமார் 32 முறை வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் 23.61 லட்சம் ரூபாயைத் தொழிலதிபர் அனுப்பியுள்ளார். மிரட்டல் அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதம் மட்டும் ஒரே தவணையாக 40 லட்சம் ரூபாயைப் பறித்துள்ளனர். இந்தப் பணத்தின் ஒரு பகுதி ஃபர்கந்தா கானின் தந்தை கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில், டெல்லி ஹோட்டலில் பதுங்கியிருந்த ஃபர்கந்தா மற்றும் அவரது சகோதரரைப் போலீஸார் கைது செய்தனர். மற்றொரு கூட்டாளி ஸ்ரீநகரில் சிக்கினான். இவர்கள் மூவரும் சேர்ந்து திட்டமிட்டு இந்த ‘ஹனி ட்ராப்’ பாணி மோசடியைச் செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.