கணவரைக் கொலை செய்த வழக்கில் மீரட் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்கான் என்ற பெண், தற்போது தீவிர ஆன்மீகப் பாதையில் திரும்பியிருப்பது சிறை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “உலக வாழ்க்கை வெறும் மாயை, இறைவனே கதி” என சக கைதிகளிடம் அவர் பேசி வருகிறார்.
கடந்த 13 மாதங்களாக சிறையில் இருக்கும் முஸ்கானைப் பார்க்க அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த தனிமையின் காரணமாக அவர் தன்னை முழுமையாக ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஒரு நாளில் சுமார் 7 மணிநேரத்தை இறைவனுக்காக அவர் ஒதுக்குகிறார். எப்போதும் கையில் உருத்திராட்ச மாலையுடன் மந்திரங்களை ஜபித்தபடி இருக்கும் அவர், சிவபெருமானின் வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
சிறையில் நடைபெறும் பஜனைகள், சத்ஸங்கம் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகளில் முஸ்கான் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், “மனிதர்களுக்கு உண்மையான துணையாக இருப்பது இறைவன் மட்டுமே. இக்கட்டான சூழலில் கடவுள் மட்டுமே நம்மைக் கைவிடாமல் காப்பார்” என சக பெண் கைதிகளிடம் உருக்கமாகப் பேசி வருகிறார்.
முன்னதாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த முஸ்கான், தற்போது அதிலிருந்து விடுபட்டு ‘பக்தி போதையில்’ இருப்பதாகச் சிறை காவலர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கின் வாக்குமூலத்திற்கு முன்புவரை மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், தற்போது நிம்மதியாகக் காணப்படுகிறார்.
முஸ்கான் தனது கணவர் சௌரப்பைக் கொலை செய்த வழக்கில், தனது காதலன் சாஹிலுடன் மீரட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களது கள்ளக்காதலை கணவர் எதிர்த்த காரணத்தால், இருவரும் சேர்ந்து சௌரப்பைத் துண்டு துண்டாக வெட்டி, சிமெண்ட் டிரம்முக்குள் வைத்துப் பூட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் உடன் இருக்கும் சாஹில், சிறையில் உள்ள விவசாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். கணவரைக் கொடூரமாகக் கொன்ற ஒரு பெண், தற்போது ஆன்மீகவாதியாக மாறியிருப்பது சிறை வளாகத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும் சிறையில் இருக்கும் முஸ்கானுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
