மதுரையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகணேஷ் – கார்த்திகை செல்வி தம்பதியின் 5 வயது இரட்டை பெண் குழந்தைகளில் ஒருவரான சாய் தீப்தி, ராமநாதபுரத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தபோது, நள்ளிரவில் திடீரென மாயமாகி அருகில் இருந்த உறை கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி மாயமானதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தேடியபோது, பால்பாண்டி என்பவரது வீட்டின் பின்புற கிணற்றில் சாய் தீப்தி சடலமாக மிதந்ததைக் கண்டு அவளது தாய் கார்த்திகை செல்வி கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுமி கிணற்றில் வீசிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடூரக் கொலையைச் செய்த சபரிகா என்ற 22 வயது பெண்ணை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிக்கொண்டு தண்டவாளம் நோக்கிச் சென்றபோது, சாய் தீப்தி கண்விழித்து ‘அத்தை எங்கே செல்கிறோம்’ என்று கேட்க, அவளைத் தட்டிக்கொடுத்துத் தூங்க வைத்துள்ளார்; அப்போது தண்டவாளப் பகுதியில் நாய்கள் குரைத்ததால், மீண்டும் சிறுமியை வீட்டுக்குக் கொண்டு சென்றால் சந்தேகம் வந்துவிடும் என பயந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த கிணற்றுக்குள் வீசியுள்ளார். சிறுமி கிணற்றுக்குள் உயிருக்குப்போராடிய நிலையில், எவ்வித இரக்கமுமின்றி வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், போலீஸார் தங்களைச் சந்தேகப்பட மாட்டார்கள் என நினைத்ததாகவும் சபரிகா வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இதில் சபரிகா கார்த்திகை செல்வியின் தம்பி அஜித் குமாரின் மனைவி ஆவார். கல்லூரி படிக்கும்போதே உறவினரான அஜித் குமாரை காதலித்து அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இது அவரது மாமியார் பூமாதேவிக்கு பிடிக்கவில்லை. கடந்த 11 மாதங்களுக்கு முன்பாக சபரிகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் மாற்றுத்திறனாளியாக இருந்ததால் குடும்பத்தினர் அந்த குழந்தை மீது பாசம் காட்டவில்லை என எண்ணியுள்ளார்.
அதே நேரத்தில் கார்த்திகை செல்வியின் இரண்டு பெண் குழந்தைகளும் அழகாக இருந்ததால் சபரிகாவுக்கு பொறாமை ஏற்பட்டதோடு அந்த குழந்தைகள் அழகாக இருப்பதால்தான் குடும்பத்தினர் பாசம் காட்டுவதாக நினைத்துள்ளார். இரு குழந்தைகளுக்கும் கார்த்திகை செல்வி காதுகுத்து நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு பூமாதேவி சபரிகாவின் நகைகளை கேட்டுள்ளார். இந்த நகைகளை கொடுக்க அவருக்கு விருப்பமில்லாத காரணத்தினாலும் கார்த்திகை செல்வி வீட்டிற்கு வரும்போது எல்லாம் குடும்பத்தில் சண்டை வருவதாலும் ஆத்திரத்தில் குழந்தையை தீர்த்து கட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
