கிருஷ்ணகிரி மாவட்டம் உப்பாரப்பள்ளி கிராமத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த 30 வயது வாலிபர் ராஜசேகர், தனது தாய் மஞ்சுளாவுடன் (56) ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணியில், கர்நாடகாவில் நடந்த ஒரு கொடூரக் கொலைக் குற்றம் ஒளிந்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பக்கத்து வீட்டுக்காரரான ருத்ரபா என்பவருடன் நிலவிய வழிப் பிரச்சினைதான் தற்கொலைக்குக் காரணம் என்றும், தங்களை ஒரே குழியில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் ராஜசேகர் தனது கடை உரிமையாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு தாயுடன் தற்கொலை செய்துள்ளார். இவர்களின் சடலங்களை மீட்ட போலீஸார், தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பெங்களுருவில்  பியூட்டி பார்லர் நடத்தி வந்த நளினி என்ற பெண்ணை ராஜசேகர் காதலித்து வந்ததும், பின்னர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யத் திட்டமிட்டதால் தனது காதலி நளினியை அவன் எரித்துக் கொன்றதும் தெரியவந்தது. இந்த கொடூரக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காகக் கர்நாடக மாநில போலீஸார் ராஜசேகரைத் தேடி வந்த நிலையில், அவர்களிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினாலேயே அவன் தனது தாயுடன் ஏரியில் குதித்து தற்கொலை நாடகமாடியது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.