நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது, தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான அரசு பேருந்து நடத்துநர் ஸ்ரீதம்பிதுரை என்பவர், கடந்த ஜூன் 19-ஆம் தேதி எவ்வித காரணமும் இன்றி தான் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவரை அழைத்துச் சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கச் செய்தனர்.

இதுகுறித்து கண்ணீருடன் பேசிய நடத்துநர் ஸ்ரீதம்பிதுரை, தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் உரிய காரணமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதால் தனது குடும்பம் கடுமையான வாழ்வாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் சாதிய பாகுபாடு நிலவுவதாகவும், அதிகாரி குமார் என்பவர் தன்னை நீண்ட நாட்களாக வேலையில் இருப்பதாகக் கூறி பணியில் இருந்து நீக்கியதோடு, மீண்டும் நடத்துநர் பணி கேட்டதற்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மைப் பணி வாங்கித் தருவதாகக் கூறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

 

View this post on Instagram

 

A post shared by Sun News Tamil (@sunnews)

மேலும் அதிகாரி குமாரைத் தவிர மற்ற அனைத்து ஊழியர்களும் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும், வேலை கேட்டு அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்த நிலையில், இதுதொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.