உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அரசு மருத்துவமனையில், மனநலம் குன்றிய வாலிபர் ஒருவரைப் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் கொடூரமாகக் காலால் உதைத்துத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி என்ற அந்தத் தற்காலிகத் துப்புரவுப் பணியாளர் செவிலியர் சீருடை அணிந்து கொண்டு, எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் தரையில் அமர்ந்திருந்த அந்தப் பரிதாபத்திற்குரிய நோயாளியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது தலை, இடுப்பு மற்றும் முகத்தில் எட்டி உதைத்துள்ளார்.

சுமார் 39 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், சுற்றியிருந்த மருத்துவமனை ஊழியர்களும் பொதுமக்களும்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெண் நோயாளி என்றும் பாராமல் அடுத்தடுத்து 11 முறை காலால் உதைத்துத் தனது கொடூர முகத்தைக் காட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதை அடுத்து, அந்தப் பெண் பணியாளர் உடனடியாகப் பணியிடை நீக்கம் (செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் நடந்த இச்சம்பவத்தை அங்கிருந்த மற்ற மருத்துவமனை ஊழியர்களே தங்களின் மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ள நிலையில், வலியால் துடித்த அந்த நோயாளி அடி தாங்க முடியாமல் தரையிலேயே மெதுவாக நகர்ந்து தப்பிக்க முயன்றது பார்ப்போரைக் கலங்க வைத்துள்ளது.

 

செவிலியர்கள் மூன்று ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பின் அணியும் இந்தச் சீருடையை, இந்தத் துப்புரவுப் பணியாளர் தினமும் சட்டவிரோதமாக அணிந்து கொண்டு மருத்துவமனையில் வலம் வந்துள்ளதும், இதனைப் பலமுறை கண்டித்தும் அவர் கேட்காமல் தனது அதிகாரத் தோரணையைத் தொடர்ந்து காட்டி வந்ததும் தற்பொழுது அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்ட சமூக வலைதளப் பயனர்கள், அந்தப் பெண் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.