திருமண மேடையில் மணமகன் கழுத்தில் மாலையிட்ட சில நிமிடங்களிலேயே, போலி போலீஸ் வேடமிட்டு வந்து லட்சக்கணக்கில் சுருட்டிய மணமகள் உட்பட 8 பேரை உ.பி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்த முகேஷ் மீனா, தனது சகோதரர் பிரம்மமோகன் மீனாவுக்கு பெண் தேடி வந்த நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த ராஜு சர்மா என்ற புரோக்கர் மூலம் கோரக்பூரைச் சேர்ந்த நீலம் என்ற பெண்ணின் வரன் கிடைத்துள்ளது.
பெண்ணின் அழகிய புகைப்படங்களை நம்பி, திருமணத்திற்காக ஒட்டுமொத்த மீனா குடும்பமும் கோரக்பூருக்கு வந்துள்ளது. அங்கு, பெண் வீட்டாரின் போலி அத்தை, மாமா என நாடகக் கதாபாத்திரங்கள் சூழ மணமேடையில் மணமக்களுக்குள் மாலை மாற்றிக் கொள்ளும் ‘சடங்கு கோலாகலமாக நடந்து முடிந்தது.
அடுத்த நொடியே, அங்கு அரங்கேறிய சினிமா பாணி ட்விஸ்ட் ஒட்டுமொத்த குடும்பத்தையும் உரைய வைத்தது. திடீரென சப்-இன்ஸ்பெக்டர் உடையில் அன்குர் சிங் என்ற ரவுடியும், அவனது கூட்டாளிகள் மூவர் காவலர் உடைகளிலும் அதிரடியாக நுழைந்தனர். இந்தத் திருமணம் சட்டவிரோதமானது என்றும், மணமகள் மைனர் பெண் என்றும் மிரட்டிய போலி போலீஸார், மாப்பிள்ளையையும் அவரது சகோதரரையும் ஜெயிலில் தள்ளி வாழ்க்கையை நாசமாக்கி விடுவதாக மிரட்டினர்.
புதிய ஊரில், அவமானத்திற்கும் சட்டப் பழிக்கும் அஞ்சிய ராஜஸ்தான் குடும்பத்தினர், வழக்கை இங்கேயே முடித்துக்கொள்ளுமாறு கெஞ்சியதைக் சாதகமாக்கிய போலி போலீஸ் கும்பல், லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்துக் கொண்டு, மணமகளையும் ‘போலீஸ் காவலில்’ எடுப்பது போல் நடித்து அங்கிருந்து எஸ்கேப் ஆனது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குடும்பத்தினர் ராஜஸ்தான் திரும்பியதும் புகார் கொடுக்க மணமகள்’ நீலம் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
