இந்திய ராணுவத்தின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான ‘பிரிகேடியர்’ பதவியில் இருப்பதாகக் கூறி, யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சினிமா பாணியில் மோட்டிவேஷன் கிளாஸ் எடுத்த 21 வயது போலி ராணுவ அதிகாரி ஆர்யன் வர்மாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் மீண்டும் வெளியாகி நெட்டிசன்களின் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த ஆர்யன் வர்மா, தான் இரண்டு முறை நீட் தேர்வில் தோற்றதாகவும், பின்னர் ஒரு மாவட்ட ஆட்சியரின் உந்துதலால் யுபிஎஸ்சி படிக்க வந்ததாகவும் கூறி மாணவர்களிடம் பேசும் அந்த வீடியோவில், பின்னணியில் ஒரு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரை நிறுத்திக்கொண்டு, ஏதோ குறைந்த பட்ஜெட் ஆக்ஷன் பட ஹீரோ போல பந்தாவாக ‘போஸ்’ கொடுத்துள்ளார். “வெளியுலக மனிதர்களுடன் பழகினால் தான் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்” என்று அவர் பேசும் தத்துவங்கள் ஒருபுறமிருக்க, அவரது அலப்பறையான ஓப்பனிங் சீன் தான் இப்போது இணையத்தின் ஆகச்சிறந்த மீம் மெட்டீரியலாக மாறியுள்ளது.
An old video of Brigadier Aryan Verma has come to light in which the general officer is motivating UPSC aspirants. A two time NEET aspirant himself, the distinguished officer tells them that they too can become like him. Don’t miss the gunmen’s pose in the beginning of the video. pic.twitter.com/izDKchcILZ
— THE SKIN DOCTOR (@theskindoctor13) June 30, 2026
உண்மையில், இந்திய ராணுவத்தில் ஒருவர் ‘பிரிகேடியர்’ அந்தஸ்தை எட்ட குறைந்தது 25 முதல் 28 ஆண்டுகள் வரை கடினமான சேவை செய்ய வேண்டும் என்பது பொதுவான விதி. ஆனால், இந்த 21 வயது இளைஞன், மிக நேர்த்தியாக தைக்கப்பட்ட ராணுவ சீருடையை வாங்கிக்கொண்டு, சொகுசு எஸ்யூவி காரை வாடகைக்கு எடுத்து, உள்ளூர் பவுன்சர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ₹2,000 சம்பளம் கொடுத்து அவர்களை கமாண்டோக்கள் போல தனக்குப் பின்னால் நிறுத்திக் கொண்டு ஒட்டுமொத்த குடும்பத்தையும், அக்கம் பக்கத்தினரையும், பயிற்சி மைய மாணவர்களையும் நம்ப வைத்து ‘இந்தியாவின் மிக இள வயது பிரிகேடியர்’ என்று வலம் வந்துள்ளான்.
இவனது இந்த நூதன நாடகம் ஷாஜஹான்பூர் கன்டோன்மென்ட் (ராணுவ முகாம்) பகுதிக்கு மோட்டிவேஷன் லெக்சர் கொடுக்கச் சென்றபோது, உண்மையான ராணுவ உளவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்ட போதுதான் முடிவுக்கு வந்தது. சோதனையில் அவனிடமிருந்து போலி அடையாள அட்டை, போலி சீல் மற்றும் ஒரு பொம்மை துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராணுவத்தில் சேர தகுதியற்ற ‘நாக் நீ’ (Knock knees – முட்டிகள் ஒன்றோடொன்று இடிக்கும் காலமைப்பு) குறைபாடு அவனுக்கு இருந்ததும் தெரியவந்தது.
இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், “இவனது ஏமாற்றுத் திறமைக்கு இவனை டிரோன் அல்லது ஏவுகணையில் கட்டி பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பி வைத்தால், அங்கிருக்கும் ராணுவ தளபதி ஆசிம் முனீரை அப்படியே டின்னர் சாப்பிட இந்தியாவுக்குக் கடத்திக் கொண்டு வந்துவிடுவான்” என்றும், “யுபிஎஸ்சி படிக்கும் மாணவர்களுக்குக் கூட ராணுவ பதவிகளின் வரிசை தெரியவில்லையா?” என்றும் சமூக வலைதளங்களில் காரசாரமாகவும் நகைச்சுவையாகவும் விவாதித்து வருகின்றனர்.
