மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் மஸ்கான் சோனி, புனேவில் நடந்த கேதன் அகர்வால் என்ற ரியல் எஸ்டேட் அதிபரின் கொலைச் சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தற்பொழுது தனது பதவியையும், அமைப்பின் உறுப்பினர் தகுதியையும் இழந்து சிக்கலில் சிக்கியுள்ளார்.
கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவர் விக் (wig) அணிந்திருந்தது மற்றும் தலைமுடி குறைபாடு குறித்த வதந்திகளை மையப்படுத்தி, “நீங்கள் பொய் சொன்னால், இறக்கத்தான் செய்வீர்கள்… சோ ஹேஷ்டேக் ஐ ஹேட் மென்” என்று அந்த டாக்டர் அந்த வீடியோவில் இழிவாகப் பேசியிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, அகில இந்திய பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (AIDSA) மத்தியப் பிரதேசக் கிளையிலிருந்து அவர் பொருளாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அவரது உறுப்பினர் தகுதியும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ள ஏஐடிஎஸ்ஏ அமைப்பு, மறைந்த கேதன் அகர்வாலைப் பற்றி அவர் மிகவும் அநாகரிகமாகவும், ஒழுக்க நெறிகளுக்குப் புறம்பாகவும் பேசியது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு விரோதமானது என்று கடுமையாகக் கண்டித்துள்ளது.
இதனிடையே, கேதன் அகர்வாலின் குடும்பத்தினர் அவரது முடி இழப்பு குறித்த தகவலை முன்பே பெண்ணின் குடும்பத்திடம் வெளிப்படையாகக் கூறியிருந்ததாகத் தெளிவுபடுத்தியிருந்த நிலையில், மருத்துவர் மஸ்கான் சோனி தனது செயலுக்குப் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இருப்பினும், “நான் ‘ஐ ஹேட் மென்’ என்று குறிப்பிட்டது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் மட்டுமே, ஒட்டுமொத்த ஆண்களையும் நான் குறிவைக்கவில்லை” என்று தனது தரப்பு நியாயத்தைப் பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
“ஒரு கொலை சம்பவத்தை வைத்துக்கொண்டு, அதுவும் இறந்தவரை இழிவுபடுத்தி இப்படி ஒரு டாக்டர் சோசியல் மீடியால ரீல்ஸ் போடுறது எந்த வகையில நியாயம்.. இந்த மாதிரி பொறுப்பற்ற செயல்களுக்குக் கடுமையான ஆக்ஷன் தேவை!” என்று நெட்டிசன்கள் மத்தியில் அனல் பறக்கும் விவாதங்களுடன் இந்தச் செய்தி இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
