மேற்குவங்கம் மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயிலும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி மீது கும்பல் பாலியல் வன்கொடுமை நடத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது ஆண் நண்பருடன் வெளியே உணவருந்த சென்றபோது இந்த கொடூரம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனை வளாகத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மாணவி மற்றும் அவரது நண்பர் சென்றபோது, ஒரு கும்பல் தங்கள் வாகனத்திலிருந்து இறங்கி அவர்களை நோக்கி விரைந்துள்ளது.

இதைக் கண்டு பயந்த அவர்கள் காட்டுப் பகுதியில் ஓடியதாகவும், பின்னர் அந்தக் கும்பலில் மூவர் மாணவியைக் கட்டிப்பிடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் போலீசாருக்கு மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாணவியின் கூற்றுப்படி, “அவர்கள் என் மொபைலை பறித்து என் நண்பருக்கு அழைக்க சொன்னார்கள், ஆனால் அவர் வரவில்லை என்பதால் வற்புறுத்தி தரையில் படுக்கச் சொன்னார்கள். நான் கத்திய போது மேலும் பலரை அழைத்து வந்து இதே செயலை செய்ய வைப்போம் என மிரட்டினர்” எனக் கூறியுள்ளார்.

தற்போது மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டு, ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இதில் மருத்துவமனை ஊழியர், முன்னாள் பாதுகாவலர், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் உள்ளிட்டோர் அடங்குவதாக தகவல்.

சந்தேகநபர்கள் அனைவரையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குற்றம் நடந்த விதத்தை மறுஅவதானிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பதிலளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், “இரவு நேரத்தில் மாணவிகள் வெளியே போகக்கூடாது” என்ற கருத்து பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாணவியின் தந்தை கடுமையாக எதிர்வினையொளித்து, “அவர் ஒரு பெண். இப்படிப்பட்ட பொறுப்பற்ற பேச்சு ஏன்? பெண்கள் வீட்டில் உட்காரவேண்டுமா? மேற்கு வங்கம் அவுரங்கசீப் ஆட்சியில் இருக்கிறதா?” எனக் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். “என் மகளை ஒடிசாவிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அவரது உயிர் முக்கியம், தொழிலை பிறகு பார்க்கலாம்” என வேதனையுடன் கூறியுள்ளார்.