குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தனது மருமகள் அவர்களது தோழர், தோழிகளுக்கு மது விருந்து அளிப்பது குறித்து மாமியார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது “வீகென்ட் அட்ரஸ்” என்ற ஹோட்டலில் மது விருந்து வைத்திருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அறைஎண் 443இல்  நுழைந்தபோது 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் அனைவருமே 23 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 6 பேர் பல வெளிநாட்டு மதுபான பாட்டில்களுடன் தரையில் அமர்ந்து மது அருந்தி கொண்டாடுவதை கண்டனர். மேலும் அறை  முழுவதும் மதுவின் கடுமையான வாசனை நிரம்பி இருந்ததாகவும், அறையில் இருந்த அனைவருமே நிலைத் தடுமாறிய நிலையில் போதையில் இருந்ததும் தெளிவாக தெரிந்தது.

அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து அந்த அறையில் இருந்த வெளிநாட்டு மதுபான பாட்டில்கள், ரூபாய் 2.55 லட்சம் மதிப்புள்ள ஏழு ஸ்மார்ட் ஃபோன்கள், 4 கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே குஜராத்தில் மது அருந்தும் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து அனுமதி பெறாமல் அறைகளை வாடகைக்கு விடுபவர்கள் மீதும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த பெண்ணின் மகனின் மனைவியும் அந்த பெண்களில் ஒருவர் என்பதால் தனது மருமகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்து இவ்வாறு புகார் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த ஹோட்டலில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். மேலும் அறையை ஒப்பந்தத்திற்கு எடுத்து அதிக விலைக்கு வாடகைக்கு விடும் உரிமையாளர் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.