உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் இளைஞர் ஒருவரின் உடல் ஆம்புலன்ஸிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட இறந்தவர் ஹிருதய் லால் என்பவர் மதுபான கடத்தல் தொடர்பான தகராறில் கொடூரமாக தாக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

அந்தத் தகராறில் அவரது நிலைமை மோசமானதால் லக்னோவில் உள்ள மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஹிருதய் லால் திருமணம் செய்துள்ளதாகவும் அதற்குள் இது போன்ற தகராறில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் அவரது உடல் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டபோது அதிலிருந்த ஒரு நபர் அவரது உடலை வெளியே இழுத்து சாலையில் வீசியுள்ளார். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்லப்பட்ட போது நிகழ்ந்துள்ளது. மேலும் இதில் அதிர்ச்சிகரமான செயல் என்னவென்றால் உடலை வெளியே இழுத்து போடும்போது அப்பகுதியில் அனைத்து மக்களும் கூடி இருந்துள்ளனர்.

மேலும் காவல்துறையினரும் அப்பகுதியில் நின்றுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள உள்ளூர் வாசிகளும் உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடைபெறும் எனவும், முறையாக உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.