ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் புனேவில் உள்ள பிஜே அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மாணவி விடுதி அறைக்கு வராததால் தோழிகள் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர்.

ஆனாலும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த தோழிகள் மாணவி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விடுதிக்கு வந்து சோதனை செய்தனர்.

அப்போது விடுதியில் இருக்கும் மற்றொரு அறையில் காணாமல் போன மாணவி தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கும் முன்பாக மாணவி எழுதி இருந்த கடிதத்தில் தான் மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் படிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் இருக்கும் மற்ற விவரங்களை போலீசார் வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.