அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ‘கப்ருஜி’ (Gabhruji), இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பும் வேளையில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
“இந்தியாவை விட்டு கிளம்ப இன்னும் 8 மணி நேரமே உள்ளது, இதை நினைத்தால் எனக்கு அழுகை வருகிறது” என்று உருக்கமாகப் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியிடம் தனக்கு ஒரு ‘ஆதார் கார்டு’ வேண்டும் எனச் செல்லமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
View this post on Instagram
“வெள்ளைக்காரராக இருப்பதால் என்னிடம் எல்லாம் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்; ஆனால் உண்மையில் இந்திய மக்களிடம்தான் அன்பும், மகிழ்ச்சியும் என எல்லாமே இருக்கிறது” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தெருவோர உணவுகள், பைக் பயணங்கள் மற்றும் மக்களின் உபசரிப்பு என ஒவ்வொன்றையும் பாராட்டித் தள்ளிய கப்ருஜி, “மிஸ் யூ இந்தியா” எனத் தனது பிரியாவிடையைப் பதிவு செய்துள்ளார்.
சுமார் 26 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவைப் பார்த்த இந்திய நெட்டிசன்கள், “நீங்கள் இந்தியாவை விட்டுச் சென்றாலும், இந்தியா உங்களை விட்டுப் பிரியாது” என அன்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர். வெளிநாட்டவர் ஒருவர் நம் நாட்டின் மீது காட்டியுள்ள இந்த உண்மையான அன்பு, பலரையும் வியக்க வைத்துள்ளது.
