இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அழகால் கவரப்பட்டு சுற்றுலா வந்த தென்கொரிய பெண் வ்லாகர் ஒருவருக்கு, இங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வீதியில் நடந்து சென்ற அவரிடம் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள், அவர் மறுத்த பிறகும் அநாகரீகமாக நடந்துகொண்டதோடு, அவரைத் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்துள்ளனர்.
“ஐ ஹேட் இந்தியா” என்று அவர் கேமராவிற்கு முன்பே கதறி அழுத வீடியோ, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இருக்கிறதா? என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
தனது இந்தியப் பயணத்தின்போது பல இடங்களில் தான் பின்தொடரப்பட்டதாகவும், ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் கடைக்காரர்கள் வரை பலரும் தன்னை ஏமாற்ற முயன்றதாகவும் அந்தப் பெண் தனது வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் காரில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தும், அங்கு அவருக்கு நேர்ந்த மற்ற சம்பவங்களும் அவரை மனதளவில் வெகுவாகப் பாதித்துள்ளன.
“இந்தியா ஒரு அழகான நாடு என்று நினைத்து வந்தேன், ஆனால் இப்போது எனக்கு இந்த நாட்டைப் பிடிக்கவில்லை” என்று அவர் கண்ணீர் விட்டுக் கூறியது நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
