உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் – ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து பார்ப்பவர்களைக் கலங்க வைத்துள்ளது. விபத்துக்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அந்த காரில் இருந்த இளைஞர்கள் உற்சாகமாகப் பாட்டுப் பாடி, நடனமாடி ‘பார்ட்டி’ கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காரின் முன் இருக்கையில் இருந்த இளைஞர் சீட் பெல்ட் அணியாமல் டேஷ்போர்டில் சாய்ந்து கொண்டு விளையாடியதும், ஓட்டுநரின் கவனம் சிதறியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் பாதுகாப்பை மறந்த இளைஞர்களின் இந்தச் செயல் அவர்களின் உயிரையே பறித்துள்ளது.

அதிவேகமாக வந்த அந்த மஹிந்திரா XUV500 கார், சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வேகம் எந்த அளவுக்கு இருந்ததென்றால், காரின் முன்பகுதி முழுவதுமாக நசுங்கி லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த நான்கு நண்பர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். “வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவதும், கவனம் சிதறாமல் இருப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்த விபத்து ஒரு கசப்பான பாடம்” என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.