பெங்களூருவில் புதுமணப் பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பான மன அழுத்தம் காரணமாக, இளைஞர் ஒருவர் நாக்பூரில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ் சிவன்னா (26). ஆன்லைன் டெலிவரி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி கன்வி (26), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு சில நாட்கள் பெங்களூரில் ஒன்றாக வாழ்ந்த தம்பதி, பின்னர் 10 நாள் தேனிலவுக்காக இலங்கைக்கு சென்றனர். அங்கு இருந்தபோது, கன்வியின் திருமணத்திற்கு முந்தைய காதல் விவகாரம் குறித்து சூரஜ் அறிந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஐந்து நாட்களிலேயே தேனிலவை ரத்து செய்துவிட்டு அவர்கள் பெங்களூரு திரும்பினர்.

இதன் பின்னர், கன்வி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நிலையில், கடந்த வாரம் திடீரென தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கன்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயே புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்விக்கும், அவரது மாமியார் ஜெயந்தி (60) என்பவருக்கும் இடையே திருமணம் ஆன நாளிலிருந்தே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சூரஜின் குடும்பத்தினர் கன்வியை அவமரியாதையாக நடத்தி, வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, பெங்களூரு காவல் நிலையத்தில் கன்வியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன் பேரில், சூரஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சூரஜ் மற்றும் அவரது தாயை கைது செய்யக் கோரி, கன்வியின் உறவினர்கள் சூரஜ் வீட்டின் முன்பாக திரண்டு போராட்டம் நடத்தினர்.

இந்த தொடர் சம்பவங்களால் மனஅழுத்தத்தில் இருந்த சூரஜ், காவல்துறையினர் விசாரணை நடத்துவார்களோ என்ற அச்சத்தில், சம்பவத்தன்று தனது தாய் ஜெயந்தி மற்றும் சகோதரர் சஞ்சய் ஆகியோருடன் பெங்களூரிலிருந்து வெளியேறினார். முதலில் ஐதராபாத் சென்ற அவர்கள், பின்னர் கடந்த 26-ஆம் தேதி சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாராஷ்டிர மாநில நாக்பூருக்கு சென்றனர்.

அங்கு, நாக்பூர் வர்தா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில், சூரஜ் அந்த அறையில் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்றிருந்த ஜெயந்தி, இரவு அறைக்கு திரும்பியபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரும் தூக்குமாட்டிக் கொள்ள முயன்றபோது கயிறு அறுந்து கீழே விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் ஓடி வந்து, சூரஜ் மற்றும் ஜெயந்தியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சூரஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, காவல்துறையினர் சூரஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது சகோதரர் சஞ்சயிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கன்வியின் குடும்பத்தினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், சம்பவத்தன்று சுமார் 30 பேர் சூரஜை தேடி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாகவும், இதனால் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்ததாகவும் சஞ்சய் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.