நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று தன்னை இணைத்துக் கொண்டார். இணைந்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், தனது கடந்த கால அரசியல் அனுபவங்கள் குறித்து மனம்திறந்து பேசினார். “அறிவாலயத்தில் இருந்து என்னை வசையாகப் பேசினார்கள்*. என்னைத் தொடர்ந்து வசைபாடியதால், மனதளவில் உடைந்து போனேன் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், தி.மு.க.வின் அறிவுத் திருவிழாவில் கலந்துகொள்ள தனக்கு திட்டமிட்டு அழைப்பு விடுக்கப்படவில்லை, நிராகரிக்கப்பட்டேன் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்த நிகழ்வுகளால், தான் கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் ஒதுங்கி இருந்ததாகவும் அவர் கூறினார்.
பெரியார், அண்ணா ஆகியோரின் இலட்சியங்களைப் பேசிக்கொண்டிருந்த தான், இப்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது புதிதாய் பிறந்ததைப் போல் எண்ணி பூரிப்படைவதாக நாஞ்சில் சம்பத் உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இனி பேசுவதற்குத் தன்னிடம் நிறைய உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“என்னை இத்தனை நாட்களாக முடக்கி வைத்திருந்தனர். இப்போது பரப்புரை செய்வதற்கான வாய்ப்பை விஜய் தந்துள்ளார். என்னைப் பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அவர் கொடுத்திருக்கிறார்,” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும், நடிகர் விஜயிடம் இளைஞர்களை வைத்து அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டம் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
