டெல்லியின் பத்ரா காலனி (Batra Colony) பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர், தனது வீட்டின் வாசலில் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த குரங்குகள் கூட்டத்தில் இருந்து ஒரு குரங்கு, திடீரெனப் பாய்ந்து மூதாட்டியைத் தாக்கியது. அந்தப் பெண் சுதாரிப்பதற்குள் மற்ற குரங்குகளும் அவர் மீது பாய்ந்து தலை மற்றும் கால்களில் கடித்துக் குதறின.

இந்தத் திடீர் தாக்குதலில் நிலைதடுமாறி நாற்காலியில் இருந்து கீழே விழுந்த மூதாட்டி, குரங்குகளிடம் இருந்து தப்பிக்கப் போராடினார். சுமார் 3 இடங்களில் ஆழமான கடி காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டெல்லியின் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமல்லாமல், நாடாளுமன்றம் மற்றும் விஐபி (VIP) பகுதிகளிலும் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான புகார்கள் வந்தாலும், அதிகாரிகளால் இதற்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காண முடியவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.