மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் சுரேஷ் கோபி, தற்போது திரிச்சூர் மக்களவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்பியாகவும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் இணை மந்திரியாகவும் பணியாற்றி வருகிறார். ரசிகர்களிடையே தனிச்சிறப்பை பெற்ற இவருக்கு, அரசியல் பாதை எதிர்பாராத முறையில் கிடைத்ததாக கூறியதுடன், இது தாம் தேடிய பதவி அல்ல என நேரடியாக தெரிவித்துள்ளார்.
கண்ணூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சுரேஷ் கோபி, “நான் இன்னும் நடிக்க விரும்புகிறேன்… வருவாய் இப்போது முற்றிலுமாக நின்று விட்டது… எனக்குத் தேவைப்படுவது பணம். நான் ஒருபோதும் மந்திரி பதவிக்காக விரும்பியதில்லை. தேர்தலுக்கு ஒரு நாள் முன்பும் ‘எனக்கு இந்த பதவி வேண்டாம், நான் என் நடிப்பைத் தொடர விரும்புகிறேன்’ என்று சொல்லியிருக்கிறேன்” எனக் கூறினார். அவரது இந்த பேச்சு, நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
மேலும், “பா.ஜ.க-வின் இளம் உறுப்பினர் எனக்கு தெரிந்தவர் சதானந்தன் மாஸ்டர். அவரைத் தான் மத்திய மந்திரியாக நியமிக்க வேண்டுமென்றும், அவரே அதற்கு நலமுடையவர்” என சுரேஷ் கோபி தனது கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். சினிமாவையும், நேர்மையையும் ஒருசேரக் கொண்டு சென்ற அவரது இந்த நேரடித்தன்மை, தற்போது கேரள அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
