மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த கிரண் சூரஜ் (29) என்ற தேசிய அளவிலானக் கபடி வீராங்கனை, கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டச் சோகச் சம்பவம் நடந்துள்ளது.

ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்த கிரணுக்கு, நிதி நெருக்கடி இருந்ததை அறிந்து கொண்ட ஸ்வப்னில் என்பவர், கிரணுக்கும் அவரதுச் சகோதரனுக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கிரணைத் திருமணம் செய்ய நிபந்தனை விதித்துள்ளார்.

கிரண் இதற்குச் சம்மதித்து 2020-ஆம் ஆண்டு ஸ்வப்னிலைத் திருமணம் செய்த பிறகும், அவர் சொன்னபடி வேலை வாங்கித் தராததால் இருவருக்கும் இடையே அடிக்கடிச் சண்டை வந்துள்ளது.

வேலை கிடைத்த பின்னரே மற்ற உறவுகளுக்குச் சம்மதிப்பதாக கிரண் கூறியதால், ஸ்வப்னில் கிரணை சித்ரவதை செய்யத் தொடங்கினார்.

கணவரின் தொல்லை தாங்காமல், விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பிறகும், ஸ்வப்னில் தொடர்ந்து மிரட்டி வந்ததால், வேறு வழியின்றி கிரண் வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். தலைமறைவான ஸ்வப்னிலை போலீஸார் தேடி வருகின்றனர்.