ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்த வழக்கில், தந்தையே குற்றத்தை ஒப்புக்கொண்டது கேரளாவையே உலுக்கியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் ஷிஜில்.
இவரது ஒரு வயது மகன் இஹான், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். தந்தை ஷிஜில் கொடுத்த பிஸ்கட்டைச் சாப்பிட்ட பிறகுதான் குழந்தை மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்டது. இதனால், முதலில் பிஸ்கட் தொண்டையில் சிக்கி குழந்தை இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.
இருப்பினும், குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நெய்யாற்றின்கரை போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது. போலீசார் ஷிஜில் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணப்பிரியாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இறுதியில், தான்தான் குழந்தையை அடித்துக் கொன்றதாக ஷிஜில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கோபத்தில் குழந்தையின் வயிற்றில் பலமாகத் தாக்கியதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்தது விசாரணையில் உறுதியானது. பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
