பெண் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், தனது 3-வது பிரசவத்திற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், தமிழக அரசின் தற்போதைய விதிகளின்படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு விடுப்பு வழங்க அனுமதி இல்லை என அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் ஷமிம் அகமது அடங்கிய அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

“தாயின் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் பராமரிப்பு என்பது அடிப்படை உரிமை. தமிழகத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை சரிந்து வரும் நிலையில், மூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது” என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு, 3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு காலம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு பெண் ஊழியரும் இதற்காக நீதிமன்றத்தை நாடக்கூடாது என்றும், இது குறித்த சுற்றறிக்கையை அனைத்துத் துறைகளுக்கும் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குக் கிடுக்கிப்பிடி உத்தரவு போட்டுள்ளனர் நீதிபதிகள்.