அசாம் மாநிலம் மேற்கு கார்கி ஆங்லாங் மாவட்டத்தில், கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பூஜா மலங் என்ற 19 வயது இளம்பெண், கடந்த புதன்கிழமை இரவு தனது தாய் அனுமாயை (42) மிகக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கத்தியால் தாயின் கழுத்தை அறுத்து, தலையை உடலிலிருந்து தனியாகப் பிரித்தெடுத்த பூஜா, அந்தத் தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் தப்பியோடியுள்ளார். இந்தக் கொடூரத்தைத் தடுக்க வந்த பூஜாவின் தந்தை மற்றும் சகோதரியையும் அவர் விட்டுவைக்கவில்லை.
அவர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். நேற்று காலை போலீஸார் பூஜாவைக் கைது செய்தபோது, அவர் தனது தாயின் வெட்டப்பட்ட தலையுடன் அங்கேயே தங்கியிருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து கத்தரிக்கோல், அரிவாள், குங்குமம், எண்ணெய் மற்றும் மண் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் படுகொலை ‘பில்லி சூனியம்’ அல்லது ‘மாந்திரீக’ சடங்குகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால், இதற்கு முன் அந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.
19 வயதுப் பெண் இவ்வளவு கொடூரமான செயலில் ஈடுபட என்ன காரணம் என்பது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
